புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூரின்போது சேதமடைந்த விமானப் படை தளங்களை சீரமைக்கிறது பாகிஸ்தான் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
காஷ்மீரின் பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள், ராணுவ மற்றும் விமானப்படை தளங்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
இதில் பாகிஸ்தானில் உள்ள போஹ்லாரி விமானப்படை தளத்தின் விமான நிறுத்தும் இடம் பலத்த சேதமடைந்தது. இந்நிலையில், அப்பகுதியை சீரமைக்கும் பணிகளில் பாகிஸ்தான் விமானப் படை ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.
குறிப்பாக, ஜனவரி 28 அன்று எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்களின் படி, சேதமடைந்த ஹேங்கரின் (விமான நிறுத்தும் இடம்) பச்சை நிறக் கூரையின் சில பகுதிகள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. இது அந்த இடத்தைச் சீரமைப்பதற்கான ஆரம்பகட்ட வேலையாகக் கருதப்படுகிறது.
அந்தப் புதிய புகைப்படம், அந்த கட்டிடம் கைவிடப்பட்ட நிலையில் இருந்து மாற்றமடைந்துள்ளதைச் சுட்டிக்காட்டுகிறது. இதேபோன்ற சீரமைப்புப் பணிகள் முரிட், சுக்கூர் மற்றும் நூர்கான் ஆகிய விமானப்படை தளங்களிலும் நடைபெற்று வருவது செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.