சென்னை: தினந்தோறும் அழகாக, ஃபிரெஷ்ஷாக, ஆரோக்கியமாக இருக்க உங்களுக்கு விருப்பமா? அதற்கு சில விஷயங்களை தினமும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அவை என்ன என்று பார்க்கலாம்.
காலையில் எழுந்தவுடன் வெறும் தண்ணீரை முகத்தில் அடித்துக் கழுவ வேண்டும். உள்ளங்கைகளைக் குவித்து நீரைப் பிடித்து, அதற்குள் உங்கள் கண்களைத் திறந்து திறந்து மூடுங்கள். இப்படிச் செய்வதால் முகத்திலும் கண்களிலும் ரத்த ஓட்டம் அதிகரித்து, நாள் முழுக்க ஃபிரெஷ்ஷாக உணர்வீர்கள்.
நன்கு வியர்க்கும்படி உடற்பயிற்சி, யோகா அல்லது நடைப்பயிற்சி செய்ய வேண்டும். இதனால் உடலில் இருக்கிற கழிவுகள் வியர்வை வழியாக வெளியேறும். உடலில் கழுத்துப்பகுதியில்தான் சீக்கிரம் சுருக்கங்கள் விழ ஆரம்பிக்கும். அதனால், கழுத்துக்கான பயிற்சிகளைக் கற்றுக்கொண்டு தினமும் செய்து வந்தால், கழுத்தில் சுருக்கங்கள் வருவது தள்ளிப்போடப்படும்.
வெந்நீரில் எலுமிச்சைச் சாறு, தேன் கலந்து குடிக்கும்போது உடலில் இருக்கிற கழிவுகள் வெளியேறி புத்துணர்ச்சியாக உணர்வீர்கள். அழகுக்கும் ஆரோக்கியத்துக்கும் பாதாம் மிக மிக அவசியம். அப்படியே சாப்பிட்டால் செரிமானப் பிரச்னைகள் வரலாம் என்பதால், முதல் நாள் இரவே பாதாம் பருப்பை ஊறவைத்து, காலையில் தோலை உரித்துவிட்டுச் சாப்பிடலாம். ஒரு நாளுக்கு 4 அல்லது 5 பாதாம் போதும்.
காலையில் பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடுவதற்கு முன் உலர்ந்த பழங்கள் அல்லது ஃபிரெஷ் பழங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். உலர் பழங்கள் ஒரு கைப்பிடியளவு போதுமானது. ஃபிரெஷ்ஷான பழங்கள் என்றால் ஒரு கப் அளவுக்குச் சாப்பிடலாம். கொரோனா தொற்று பயம் இருக்கிற இந்த நேரத்தில் பழங்களின் தோலை நீக்கிவிட்டே சாப்பிடுங்கள். பிறகு முக்கால் மணி நேரம் கழித்து காலை உணவு எடுத்துக்கொள்ளலாம்.