சென்னை: இன்றைய காலகட்டத்தில் நிறைய குழந்தைகளுக்கு கண் பார்வைக் கோளாறுகள் ஏற்படுகின்றன. சிறு வயதிலேயே அவர்கள் பல பிரச்சனைகளைச் சந்திக்கிறார்கள். இதனால் அவர்களால் சரியாகப் படிக்க முடியாமலும், வகுப்பில் கவனம் செலுத்த முடியாமலும் தவிக்கின்றனர்.
மேலும் அவர்களால் மற்ற குழந்தைகளைப் போல விளையாட முடியாமலும் போகிறது. கண்ணாடி உட்படப் பல மருத்துவ தீர்வுகள் கண் பார்வை பிரச்சனைக்கு இருந்தாலும் வரும் முன் காப்பது பெற்றோர்களின் தலையாய கடமையாகும். உங்கள் குழந்தைகளின் கண் பார்வை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்!
முட்டை
முட்டையில் இருக்கும் ஜின்ங்க் மற்றும் லுடீன் போன்ற சத்துக்கள் கண் குறைபாடு ஏற்படாமல் பெரிதளவு காக்கிறது. முட்டைக் கருவில் உள்ள ‘ஸிக்ஸாந்தின்’ புற ஊதா கதிர் வீச்சின் பாதிப்புகளிலிருந்து கண்களைப் பாதுகாக்கிறது. இதனால் உங்கள் கண் பார்வை ஆரோக்கியமாகிறது.
மீன்
ஒமேகா-3 கொழுப்பு அமிலம் கண் பார்வைக்கு மிகவும் தேவையானது. இது ரெடினாவின் ஆரோக்கியம் மற்றும் செயல்பாட்டிற்குப் பெரிதும் உதவும். கூடுதலாகக் கண்கள் உலர்ந்து போவதைத் தடுக்கிறது. பல வகையான கடல் மீன்களில் இந்த சத்து உட்படப் பல உயிர்ச்சத்துகள் நிறைந்து உள்ளன. குறிப்பாக சால்மன், டுனா ,மேக்கிரல், ட்ராவுட் போன்ற மீன் ரகங்களைக் கூறலாம்.
கீரை வகைகள்
பச்சைக் கீரை வகைகளில் அதிகம் வைட்டமின் சி மற்றும் இ சத்து நிறைந்துள்ளன. மேலும் இதில் கரோட்டினாய்டுகள் மற்றும் லியூடீன் ஆகிய சத்துக்களும் நிறைந்துள்ளன. குறிப்பாகப் பொன்னாங்கண்ணி, முருங்கை, பசலை, புதினா, பிரோக்கோலி போன்ற கீரை வகைகளில் ஆண்டி ஆக்ஸிடண்ட் நிறைவாக உள்ளது. இதனால் இதைத் தொடர்ந்து உட்கொள்வதால் நீண்ட கால கண் நோய்களை வரவிடாமல் தடுக்கவும் குணப்படுத்தவும் முடிகிறது.
சர்க்கரை வள்ளிக் கிழங்கு
இதில் பீடாகரோடின் மற்றும் வைட்டமின் ஈ நிறைந்துள்ளன. இதை உணவில் அதிக அளவு எடுத்துக் கொள்வதாலும் கண் பார்வை மேம்படும்.
ஆரஞ்சு நிற பழங்கள் மற்றும் காய்கள்
மாம்பழம், ஆரஞ்சு, காரட், எலுமிச்சை போன்ற பழங்களில் அதிக ஊட்டச்சத்து ஏ நிறைந்துள்ளது. இதனால் இரவில் பார்வை பிரகாசமாகத் தெரியும். மேலும் இந்தப் பழங்களில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால் கண்களோடு இணைந்திருக்கும் மற்ற தசைகளும் சத்து பெறும். தினம் பச்சையாக ஒரு காரட்டை உண்பதால் கண் சம்பந்தப்பட்ட கோளாறுகள் வராமல் தப்பித்துக் கொள்ளலாம்.