சென்னை: நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி மறுவரையறை தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித் தீர்மானம் தொடர்பாக பிரேமலதா விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு இதுவரை தொகுதி மறுவரையறை தொடர்பான சட்ட முன்மொழிவை கொண்டு வராத நிலையில், தமிழக சட்டப்பேரவையில் இதுகுறித்த தீர்மானத்தை எந்த அடிப்படையில் கொண்டு வர முடியும் என அவர் கேள்வி எழுப்பினார். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட்டால், அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களின் காரணமாக தமிழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை குறையும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மத்திய, மாநில அரசுகள் இணைந்து அனைத்து மாநிலங்களிலும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை கணிசமாக அதிகரிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
தற்போது மக்களவையில் 543 உறுப்பினர்கள் உள்ள நிலையில், இந்த எண்ணிக்கை 815 ஆக உயர வாய்ப்புள்ளதாகவும், அதன்படி தமிழகத்தின் தற்போதைய 39 எம்.பி.க்கள் எண்ணிக்கை 59 ஆக உயர வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவ விகிதமான 7.2 சதவீதம் குறையாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், 7 முதல் 8 லட்சம் மக்களுக்கு ஒரு எம்.பி. என்ற அளவில் பிரதிநிதித்துவம் அமைந்தால் மக்கள் பிரச்சினைகளை நேரடியாக நாடாளுமன்றத்தில் எடுத்துச் செல்ல முடியும் என்றும் அவர் கூறினார்.
