புளியரை: தமிழக-கேரள எல்லையில் கனிமவளக் கடத்தல் புகாரை அடுத்து, அமைச்சர் பிரபு நள்ளிரவில் ஆய்வு மேற்கொண்டார். கேரளா செல்லும் லாரிகள் மற்றும் அனுமதி பாஸ்கள் குறித்து, அமைச்சர் ஆய்வு செய்து, அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.
தென்காசி மாவட்டம், புளியரை, தமிழக- — கேரள எல்லை சோதனைச்சாவடி வழியாக தினமும் ஆயிரக்கணக்கான கனிமவள லாரிகள், கேரள மாநிலத்துக்கு சென்று வருகின்றன.
இதில், முறைகேடுகள் நடைபெறுவதாக புகார் எழுந்த நிலையில், கனிமவளத்துறை அமைச்சர் பிரபு, நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென சோதனை சாவடியில் ஆய்வு மேற்கொண்டார்.
கேரளா செல்லும் லாரிகள் மற்றும் அனுமதி பாஸ்கள் குறித்து, அமைச்சர் ஆய்வு செய்து, அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார். இதற்கிடையே, தென்காசி மாவட்டத்தில் செயல்படும் கல்குவாரிகள் குறித்து கலெக்டர் கமல் கிஷோருக்கு பல புகார்கள் வந்தன.
அவரது உத்தரவில், கனிமவளத்துறையினர் நடத்திய ஆய்வில், 54 குவாரிகளில், 18 குவாரிகளில் முறைகேடு இருப்பது தெரியவந்தது. அந்த, 18 குவாரிகளையும் தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், விரிவான ஆய்வுக்கு பின், மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கனிமவளத்துறையினர் தெரிவித்தனர்.