அண்ணாநகர்: தேமுதிக கொடி தினமான இன்று, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். பிரேமலதா விஜயகாந்த் உறுதிமொழியை வாசிக்க, கட்சியினர் உறுதிமொழி ஏற்றனர். இந்நிகழ்ச்சியில் தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ் மற்றும் பார்த்தசாரதி, விஜயபிரபாகரன், தேமுதிக தொண்டர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் பிரேமலதா விஜயகாந்த் பொதுமக்களுக்கு சேலை வேட்டி, அன்னதானம் வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தேமுதிக கொடி அறிவிக்கப்பட்ட நாளையொட்டி தமிழகம் முழுவதும் ஒரு மாதம் பொதுக்கூட்டம் நடத்த உள்ளோம். கூட்டணி அமைந்ததும் ராஜ்யசபா பதவி கையொப்பமிட்டு உறுதி செய்யப்பட்டது. ராஜ்யசபா தேர்தலுக்கான நாள் வரும்போது, தேமுதிக சார்பில் ராஜ்யசபாவுக்கு யார் செல்லப் போகிறார்கள் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்.
விஜய்யுடன் கூட்டணி வைப்போமா என்று விஜய்யிடம் கேட்க வேண்டும். நாங்கள் 20 வருட கட்சி, இந்தக் கேள்வி எங்களிடம் கேட்கக் கூடாது. நாங்கள் எந்தக் கூட்டணியில் இருக்கிறோம் என்று ஒவ்வொரு முறையும் கூறி வருகிறோம். அதிமுக உட்கட்சி பிரச்சனைகள் குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை. ஜெயக்குமார் ஒரு கருத்தையும், செங்கோட்டையன் மற்றொரு கருத்தையும் கூறுகிறார்கள். இதில் எது உண்மை, எது பொய் என்பதை அதிமுகவிடம்தான் கேட்க வேண்டும். 2026-ல் தேமுதிகவுடன் கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். முதலமைச்சரின் மருந்தகம் திட்டம் வரவேற்கத்தக்கது. விஜய் அரசியலுக்கு வருவாரா? அவர் செய்வாரா இல்லையா என்பதை என்னால் கூற முடியாது. அது அவரவர் செயல்பாடுகளைப் பொறுத்தது. இவ்வாறு அவர் கூறினார்.