புதுடில்லி: ராகுலை சந்தித்தனர்… டில்லியில் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலை மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், பஜ்ரங் புனியா ஆகியோர் சந்தித்தனர். இருவரும் காங்கிரஸ் சார்பில் ஹரியானா சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளது.
ஹரியானா சட்டசபையில் 90 இடங்களுக்கு அக்.,5ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பா.ஜ., காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. இதேபோல, சவுதாலா குடும்பத்தினர் பிரிந்து உருவான கட்சியினரும் தேர்தலில் தங்கள் செல்வாக்கை காட்ட களம் இறங்கியுள்ளனர்.
ஹரியானாவில் பா.ஜ., ஆட்சியை எப்படியாவது அகற்ற வேண்டும் என ராகுல் முடிவு செய்துள்ளார். இதற்கென, அரசுக்கு எதிரான அனைவரையும் ஒன்று திரட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக, ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக பா.ஜ.,வுக்கு எதிராக டில்லி வீதிகளில் போராட்டம் நடத்திய மல்யுத்த வீராங்கனைகளை களம் இறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் டில்லியில் ராகுலை மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், பஜ்ரங் புனியா ஆகியோர் சந்தித்தனர். இதனால் இருவரும் காங்கிரஸ் சார்பில் ஹரியானா சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளது என விவரம் அறிந்த நிர்வாகிகள் கூறுகின்றனர். போட்டியிடாவிட்டாலும், காங்கிரஸ் சார்பில் பிரசாரம் செய்வதற்கு இருவரும் களம் இறக்கி விடப்படுவர் என்று அடித்துச் சொல்கின்றனர், காங்கிரஸ் நிர்வாகிகள். அதை உறுதி செய்யும் வகையில் தான் இருவரும் ராகுலை சந்தித்துப் பேசியுள்ளனர்.