சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து அதிகாரப்பூர்வ விசாரணையைத் தொடங்கியுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை 5-ம் தேதி சென்னையில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை செம்பியம் போலீஸார் விசாரித்து வந்த நிலையில், 30 பேர் மீது 7,411 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. முக்கிய குற்றவாளிகளான திருவேங்கடம், சீசிங் ராஜா ஆகியோர் என்கவுன்டரில் கொல்லப்பட்டனர்.
தமிழக காவல்துறையின் விசாரணையில் திருப்தி இல்லை எனக் கூறி, வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் இமானுவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதையடுத்து தமிழக காவல்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ரத்து செய்த உயர் நீதிமன்றம், 2025 செப்டம்பர் 24-ம் தேதி வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் கடந்த ஜூலை 22-ம் தேதி தள்ளுபடி செய்து சிபிஐ விசாரணையை உறுதி செய்தது.
தற்போது சிபிஐ 8 பேர் மீது 5 சட்டப்பிரிவுகளின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது. செம்பியம் காவல் நிலைய ஆவணங்கள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் வழக்கை மறுபதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது.
வழக்கு விசாரணை அதிகாரியாக சிபிஐ கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆர்.ரவி நியமிக்கப்பட்டுள்ளார். கொலைக்கான உண்மையான காரணம் மற்றும் சதித்திட்டம் தொடர்பாக சிபிஐ விசாரணை முக்கிய திருப்பங்களை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
