சென்னை: சென்னையில் டெங்கு பாதிப்பு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த மாதத்தில் 1,219 பேர் பாதிக்கப்பட்டதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கொசு ஒழிப்பு பணிகள், புகை மருந்து தெளிப்பு மற்றும் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து அவற்றை அகற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் காலி மனைகளில் பழைய டயர்கள், பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் ஓடுகள் உள்ளிட்டவற்றில் தண்ணீர் தேங்காமல் பொதுமக்கள் பார்த்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டெங்கு மட்டுமின்றி சளி, இருமல், காய்ச்சல், டைபாய்டு, எலிக்காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல் பாதிப்புகளும் மழைக்காலங்களில் அதிகரிக்கக்கூடும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.
அரசு மருத்துவமனைகளில் டெங்கு நோயாளிகளுக்கு தனிப்பட்ட சிகிச்சை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. காய்ச்சல் அறிகுறிகள் ஏற்பட்டால் சுயமாக மருந்து எடுத்துக்கொள்ளாமல் மருத்துவர்களை அணுக வேண்டும் என சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
கொசுக்கள் பெருகும் இடங்களை பொதுமக்கள் கண்டறிந்து மாநகராட்சி பணியாளர்களிடம் தகவல் தெரிவிப்பதன் மூலம் நோய் பரவலைக் கட்டுப்படுத்த முடியும்.
