சென்னை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் வழங்கப்படுவது போல, தனியார் கல்லூரிகளில் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட இஸ்லாமிய சமூக மாணவர்களுக்கும் ஆண்டு கல்விக் கட்டண உதவித் தொகை வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான ஆண்டு கல்விக் கட்டண உதவித் தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார்.
பி.எஸ்சி., பி.காம். உள்ளிட்ட சில படிப்புகளுக்கான உதவித் தொகை ரூ.2,850-லிருந்து ரூ.11,250 ஆகவும், குறிப்பிட்ட முதுநிலை படிப்புகளுக்கான உதவித் தொகை ரூ.12,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், தனியார் கல்லூரிகளில் படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட இஸ்லாமிய மாணவர்களுக்கு இதுபோன்ற கல்விக் கட்டண உதவி வழங்கப்படாததால் அவர்கள் சிரமப்படுவதாக அன்புமணி தெரிவித்துள்ளார்.
அரசு கல்லூரிகளில் இலவசக் கல்வி கிடைக்கும் நிலையில், தனியார் கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் அதிக கட்டணத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்றும், பல குடும்பங்கள் கல்விக் கட்டணத்துக்காக கடன் வாங்கும் நிலை இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அரசு கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பது உள்ளிட்ட காரணங்களால், மாணவர்கள் தனியார் கல்லூரிகளை நாடும் நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட இஸ்லாமிய சமூக மாணவர்களுக்கும் ஆண்டு கல்விக் கட்டண உதவித் தொகை வழங்க வேண்டும் என்றும், 2026-27 கல்வியாண்டிலேயே இந்தத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார்.
