பாபநாசம்: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பேரூராட்சியில் 9-வது வார்டு குழு மற்றும் பகுதி சபா கூட்டம் காணியாளர் தெருவில் நடைபெற்றது.
தமிழக அரசு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், “மக்களின் தேவைகள் நம் முன்னுரிமை” என்ற அடிப்படையில் இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது.
பாபநாசம் பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன் தலைமை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் குமரேசன், 9-வது வார்டு பேரூராட்சி கவுன்சிலர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் 9-வது வார்டைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று தங்களது பகுதிகளில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பான கோரிக்கைகளை தெரிவித்தனர்.
குறிப்பாக சாலை வசதி, தெருவிளக்கு வசதி, குடிநீர் விநியோகம் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் குறித்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகள் பெறப்பட்டன. மேலும், தெருக்களில் நிலவும் சிறிய அளவிலான குறைகள், பொதுமக்களின் அன்றாட பயன்பாட்டுடன் தொடர்புடைய பிரச்சினைகள் குறித்தும் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது.
பொதுமக்கள் தெரிவித்த கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் பரிசீலித்து, தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து, அவற்றுக்கு தீர்வு காணும் வகையில் பகுதி சபா கூட்டங்கள் நடத்தப்படுவது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
கூட்டத்தில் பாபநாசம் பேரூராட்சி 9-வது வார்டைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
