குன்னூர்: நீலகிரியில் குடியிருப்பு அனுமதி பெற்ற கட்டடங்கள் வணிக பயன்பாட்டுக்கு மாற்றப்பட்டு ‘ஹோம் ஸ்டே’, காட்டேஜ் உள்ளிட்ட தங்குமிடங்களாக செயல்படுவது தொடர்பாக சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. தாசில்தார் உரிமம் வழங்குவதோ, நகராட்சி வணிக வரி வசூலிப்பதோ மட்டும் கட்டடத்தின் பயன்பாட்டை சட்டப்பூர்வமாக மாற்றிவிடாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா வளர்ச்சியுடன் கட்டடங்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அரசு மற்றும் உள்ளாட்சி தரவுகளின்படி, கடந்த பல ஆண்டுகளில் கட்டடங்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
இதனுடன், குடியிருப்பு பயன்பாட்டுக்காக அனுமதி பெற்ற கட்டடங்கள் பின்னர் சுற்றுலா தங்குமிடங்களாக பயன்படுத்தப்படுவது தொடர்பான புகார்களும் எழுந்துள்ளன.
“வரி வசூலித்தால் மட்டும் சட்டப்பூர்வமாகுமா?”
நீலகிரி சுற்றுச்சூழல் மற்றும் வனப் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் என். சதீஷ்குமார், கே. ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு, குடியிருப்பு கட்டடங்களை வணிக பயன்பாட்டுக்கு மாற்றுவதன் சட்டப்பூர்வத்தன்மை குறித்து அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது.
கட்டடத்தின் பயன்பாட்டை மாற்றுவதற்கு சட்டத்தில் அனுமதி இல்லாத நிலையில், தாசில்தார் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் உரிமம் வழங்குவது அல்லது நகராட்சி வணிக வரி, வணிக மின்கட்டணம் வசூலிப்பது மட்டும் அந்த மாற்றத்தை சட்டப்பூர்வமாக்காது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீலகிரியில் விதிமீறல் தங்குமிடங்கள் தொடர்பாக இதுவரை 107 அனுமதியற்ற தங்குமிடங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய கட்டடங்கள் தொடர்பாக அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு அடுத்த கட்ட விசாரணைக்காக அக்டோபர் 9-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
