சென்னை: தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கியுள்ள நிலையில் அதன் தாக்கம் தமிழகத்திலும் பரவி வருகிறது. சென்னை உள்ளிட்ட 26 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னை, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி உள்ளிட்ட 26 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை கேரளப் பகுதிகளில் நேற்று தொடங்கியது. மேலும் அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலின் பல பகுதிகளிலும் பரவியுள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், ஜூன் 10-ம் தேதி வரை பல பகுதிகளிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கன்னியாகுமரி, நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், தென்காசி, திருநெல்வேலி மலைப்பகுதிகள், தேனி, திண்டுக்கல், மதுரை, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.