சென்னை: எந்த பழங்கள் சாப்பிடலாம்… நீரிழிவு நோயாளிகள் அனைத்து பழங்களையும் சாப்பிடலாம். ஆனால் அதிக கிளைசெமிக் குறியீடு கொண்ட பழங்களாக இருக்கும்பட்சத்தில் அதனை குறைவாகவே உட்கொள்ள வேண்டும். நீரிழிவு நோய் ஆரம்ப நிலையில் இருந்தால் தினமும் 150 கிராம் முதல் 200 கிராம் வரை பழங்கள் சாப்பிடலாம்.
சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் 100 முதல் 150 கிராமுக்குள் பழங்கள் சாப்பிடுவது நல்லது. காலை, மதியம், இரவு நேர உணவுடன் சேர்த்து பழங்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் உண்ணும் உணவில் கார்போஹைட்ரேட் அதிகமாக இருக்கும். பழங்களிலும் இருக்கும் கார்போஹைட்ரேட்டும் உடலில் சேரும் பட்சத்தில் அதன் அளவு அதிகரித்துவிடும்.
உணவு உட்கொள்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்போ, அல்லது காலை-மதியம், மதியம்-இரவு உணவுக்கு இடைப்பட்ட நேரத்திலோ பழங்களை சாப்பிடலாம். பழங்களை நன்றாக மென்றுதான் சாப்பிட வேண்டும். பழச்சாறு பருகுவதை தவிர்க்க வேண்டும். அவை விரைவாக உறிஞ்சப்பட்டு ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை அதிகரிக்கச் செய்துவிடும். ஆனால் பழமாக உட்கொள்ளும்போது நார்ச்சத்து உடலுக்கு கிடைக்கும். ரத்தத்தில் சர்க்கரை அளவை நிர்வகிக்கவும், கட்டுப்படுத்தவும் உதவும். காலை வேளையில் பழங்கள், நட்ஸ் வகைகளை உட்கொள்ளலாம்.
வெறுமனே பழமாக சாப்பிடாமல் அதனுடன் நட்ஸ் வகைகளை சேர்த்துக்கொண்டால் குளுக்கோஸாக மாற்றப்படும் கார்போஹைட்ரேட்டுகளின் உறிஞ்சுதல் விகிதம் குறையும். பழங்களுடன் பாதாம், புரதம் நிறைந்த உணவுப்பொருட்களையும் உட்கொள்ளலாம். வெள்ளரிக்காய் மற்றும் தக்காளியை சேர்த்து உட்கொள்வதும் நல்லது.