சென்னை: கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தனக்கு ஒதுக்கப்பட்ட வீட்டை ரத்து செய்ததை எதிர்த்து பெண் ஐபிஎஸ் அதிகாரி திலகவதி வழக்கு தொடுத்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் 97வது பிறந்த நாளை முன்னிட்டு, ஞானபீடம், சாகித்திய அகாடமி விருதுகள் பெற்று தமிழுக்கு தொண்டாற்றிய எழுத்தாளர்களை கவுரவிக்கும் வகையில் கடந்த 2022ம் ஆண்டு கனவு இல்லம் எனும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், கல்மரம் என்ற நாவலுக்கு சாகித்திய அகாடமி விருது பெற்ற தமிழகத்தின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி திலகவதிக்கு சென்னை அண்ணா நகரில் 1409 சதுர அடி வீடு கடந்த 2022ம் ஆண்டு ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில், ஏற்கனவே தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வீடு ஒதுக்கீடு பெற்றுள்ளதாக கூறி கனவு இல்லம் திட்டத்தின் கீழ் திலகவதிக்கு வீடு ஒதுக்கீடு செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து தமிழக அரசு கடந்தஆண்டு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரியும், அதை ரத்து செய்ய கோரியும் தனக்கு ஒதுக்கப்பட்ட வீட்டை வேறு எவருக்கும் ஒதுக்க கூடாது என்று உத்தரவிட கோரியும் பெண் ஐபிஎஸ் அதிகாரி திலகவதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அவர் தாக்கல் செய்த மனுவில், ஏற்கனவே சொந்தமாக வீடு இருந்தாலும், கனவு இல்லம் திட்டத்தின் கீழ் எழுத்தாளர்கள் வீடு ஒதுக்கீடு பெற தகுதி உண்டு என்று 2022ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையில் குறிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், அதனை மாற்றி வீட்டு வசதி வாரியத்தில் வீடு ஒதுக்கீடு பெற்றவர்கள் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு பெற தகுதி இல்லை என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டு பத்திரப்பதிவுக்காக காத்திருந்த நிலையில், இரண்டு ஆண்டுகள் கழித்து தனக்கு வீடு ஒதுக்கீடு செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே வீடு சொந்தமாக வைத்திருக்கும் சுந்தரமூர்த்தி, எஸ்.ராமகிருஷ்ணன், மா.ராஜேந்திரன் ஆகியோருக்கு கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி எஸ்.சவுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் சேவியர் அருள்ராஜ் ஆஜராகி, அரசாணைகளில் முரண்பாடு உள்ளது. தமிழ் ஆர்வலர்களை கவுரவிக்கும் வகையில் அரசால் வழங்கப்படும் கனவு இல்ல திட்டத்தின் நோக்கம் சிதைந்துவிடக் கூடாது என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் பிப்ரவரி 11ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கும் வீட்டு வசதி வாரியத்திற்கும் உத்தரவிட்டார். அதுவரை, ஏற்கனவே திலகவதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வீட்டை வேறு எவருக்கும் ஒதுக்கீடு செய்யக்கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.