சென்னை: தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன்படி ஐ.ஜி.க்கள், எஸ்.பி.க்கள் உட்பட 13 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஐ.ஜி-க்கள் மற்றும் எஸ்.பி-க்கள் உள்ளிட்ட 13 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. குறிப்பாக, சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு ஐ.ஜி-க்கள் மாற்றப்பட்டுள்ளதோடு, கும்பகோணம் மற்றும் பொள்ளாச்சி உதவி எஸ்.பி-க்களுக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசி உள்துறை செயலர் தீரஜ் குமார் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: கும்பகோணம் உதவி எஸ்.பி அங்கித் சிங் சேலம் வடக்கு துணை ஆணையராகவும், கோவை மாவட்டம் பொள்ளாச்சி உதவி எஸ்.பி சிருஷ்டி சிங் திருச்சி தெற்கு துணை ஆணையராகவும் பதவி உயர்வு வழங்கப்பட்டு பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இதேபோல், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் செயலராக இருந்த ஐ.ஜி ராஜேஸ்வரி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு ஐ.ஜியாகவும் அந்த பிரிவில் ஐ.ஜி-யாக இருந்த கயல்விழி தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் செயலராகவும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஐஜி ரம்யா பாரதி மாநில குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். இதேபோல், சேலம் வடக்கு துணை ஆணையர் சிவராமன் வேலூர் எஸ்.பி-யாகவும் அங்கிருந்த மயில்வாகனன் சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை தெற்கு சரக எஸ்பியாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
திருச்சி தெற்கு துணை ஆணையர் டி.ஈஸ்வரன் ஆவடி போக்குவரத்து துணை ஆணையராகவும், சென்னை ரயில்வே எஸ்பி ஐ.ஈஸ்வரன் சென்னை அண்ணாநகர் துணை ஆணையராகவும், அங்கிருந்த உதயகுமார் கோயம்பேடு துணை ஆணையராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
இதேபோல கோயம்பேடு துணை ஆணையராக இருந்த சுஜித் குமார் சென்னை மேற்கு போக்குவரத்து காவல் துணை ஆணையராகவும், இங்கிருந்த சுகாஷினி தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய எஸ்பியாகவும், அங்கிருந்த நாகஜோதி காவலர் பயிற்சி கல்லூரி முதல்வராகவும் பணியிடம் மாற்றப்பட்டுள்ளனர்.