புதுடெல்லி: கோவை ஈஷா யோகா மையம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், கே.என். சிங் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல்கள் முகுல் ரோத்தகி, பூர்ணிமா கிருஷ்ணா ஆகியோர், “சுமார் 1.25 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் அனுமதியின்றி கட்டடங்கள் கட்டியுள்ளனர். ஈஷா யோகா மையம் ஒரு கல்வி நிறுவனம் அல்ல. எனவே, இந்த விவகாரத்தில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்க அனுமதிக்க வேண்டும்.
அதேபோல், சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கும் தடை விதிக்க வேண்டும். சிவராத்திரி பண்டிகை விடுமுறைக்கு பிறகு இந்த வழக்கை பட்டியலிட வேண்டும் என்றும் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து நீதிபதிகள், “பசுமை இடம் குறைவாக இருந்தாலோ அல்லது வேறு ஏதேனும் பிரச்னை இருந்தாலோ சரி செய்ய முயற்சி செய்யுங்கள்.
கண்ணெதிரே கட்டப்பட்ட கட்டடத்தை திடீரென இடிக்கச் சொல்வதால், அனுமதிக்க முடியாது. ஈஷா யோகா மையம் கல்வி நிறுவனம் இல்லை என்று கூறுவதையும் ஏற்க முடியாது. ஆனால், ஈஷா யோகா வரம்புகளை சரியாக பின்பற்றவில்லை என்றால், அல்லது சட்டத்தை மீறி செயல்பட்டால், தமிழக அரசு சுதந்திரமாக நடவடிக்கை எடுக்கலாம். அதற்கு எந்த நிபந்தனையும் இல்லை என்று கூறிய நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.