தஞ்சாவூர்: தொழிலாளர் விரோத நான்கு சட்ட தொகுப்புகளை கைவிட வேண்டும். அணுசக்தி துறையில் தனியார் அனுமதிக்கும் முடிவை திரும்ப பெற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி வரும் பிப்.12 ல் நடைபெறும் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்வோம் என்று தஞ்சாவூரில் நடந்த ஏஐடியுசி மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தஞ்சை மாவட்டத்தில் செயல்படும் ஏஐடியுசி தொழிற் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் தஞ்சாவூர் மாவட்ட சங்க அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் வெ.சேவையா தலைமையில் நடைபெற்றது. அஞ்சலி தீர்மானத்தை மாவட்ட செயலாளர் துரை.மதிவாணன் முன்மொழிந்தார். ஏஐடியுசி தேசிய முடிவுகள் குறித்து தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சி.சந்திரகுமார், மாநில முடிவுகள் குறித்து மாநில செயலாளர் ஆர்.தில்லைவனம் ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில் தொழிலாளர் விரோத நான்கு சட்ட தொகுப்பு களையும், அணுசக்தி துறையில் வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் முதலாளிகள் நுழைவதை அனுமதிக்கும் முடிவுகளை திரும்ப பெறவும், அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கின்ற மோட்டார் வாகன சட்ட திருத்தம், புதிய மின்சார சட்ட திருத்தங்களை கைவிடவும், விவசாயிகளின் பாரம்பரிய உரிமையான விதை உரிமையை தனியாருக்கு தாரை வார்க்கும் விதை சட்ட மசோதாவை திரும்ப பெறுவது உட்பட மத்திய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கண்டித்து மத்திய தொழிற்சங்கங்கள் பிப்ரவரி 12ம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளன.
இந்த வேலை நிறுத்தத்தை தஞ்சை மாவட்டத்தில் வெற்றி பெறச் செய்வோம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் தமிழ்நாடு அரசு கட்டுமான-உடல் உழைப்பு தொழிலாளர்களுக்கு நலவாரிய கூட்டத்தில் ஏற்றுக் கொண்ட முடிவின் படி மாத ஓய்வூதியம் ரூ.2000 ம் வழங்க வேண்டும். தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுகாதாரம் உட்பட அடிப்படைத் தேவைகள் மற்றும் அவலங்கள் போக்கப்பட வேண்டும், நுகர்பொருள் வாணிபக் கழக கொள்முதல் நிலையங்களில் நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும், கொள்முதலுக்குத் தேவையான சாக்கு, சணல் உள்ளிட்ட தேவைகளை முன்கூட்டியே ஏற்பாடு செய்ய வேண்டும்.
மக்களுக்கு சேவை செய்யும் போக்குவரத்து, மின்சாரம், வங்கி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் தனியார்மய நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மின் வாரிய சங்க மாநிலத் துணைத் தலைவர் பொன்.தங்கவேலு, பட்டு கைத்தறி சங்க மாநில தலைவர் கோ.மணிமூர்த்தி, கட்டுமான சங்க மாவட்ட தலைவர் சேகர், டாஸ்மாக் சங்க மாவட்ட நிர்வாகி கருணா, உடல் உழைப்பு சங்க மாவட்ட பொருளாளர் பி.சுதா, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணை செயலாளர் பி.குணசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.