தஞ்சாவூர்: தஞ்சை நகரில் போலீசார் அனுமதி பெற்று 85 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி தஞ்சை மாவட்டம் முழுவதும் 700 இடங்களிலும், தஞ்சையில் 85 இடங்களிலும் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து தஞ்சை பழைய பேருந்து நிலையம், சீனிவாசபுரம், மருத்துவக்கல்லூரிசாலை உட்பட பல இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
தஞ்சை மாவட்டம் முழுவதும் ஏறத்தாழ 700 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த சிலைகள் அனைத்தும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின் ரசாயனம் இல்லாத வகையில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத இயற்கை மூலப்பொருட்களை கொண்டு உற்பத்தி செய்யப்பட்டவை ஆகும். மேலும் பொதுமக்கள் வீடுகளில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் வகையில் தஞ்சை நகர் பகுதியில் பல்வேறு இடங்களிலும் களிமண்ணால் செய்யப்பட்ட சிறிய அளவிலான விநாயகர் உருவ சிலைகள் விற்பனை செய்யப்படடன. கடந்த ஆண்டு ரூ.30 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்ட களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகள் இந்தாண்டு ரூ.50 முதல் ரூ.150 வரை விற்பனையானது.
இதுமட்டுமின்றி ஒரு அடி முதல் 3 அடி வரையிலான விதவிதமான வர்ணங்களில் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் ரூ.150 முதல் ரூ.6000 ஆயிரம் வரை உயரத்திற்கு தகுந்தார்போல் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் கடந்தாண்டை விட இந்தாண்டு இதன் விற்பனை மிகவும் குறைவு என்று வியாபாரிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.