சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு தனது முதல் வெளிநாட்டு அரசு முறைப் பயணமாக இரவு லண்டன் புறப்பட்டுச் சென்றார்.
தமிழகத்திற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்தப் பயணத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
துபாய் வழியாக லண்டன்
சென்னை விமான நிலையத்தில் இருந்து இரவு சுமார் 10 மணியளவில் பயணிகள் விமானத்தில் துபாய் செல்லும் முதல்வர் விஜய், அங்கிருந்து மற்றொரு விமானம் மூலம் லண்டன் சென்றார்.
லண்டனில் நடைபெறும் முதலீட்டாளர்கள் சந்திப்பில் பங்கேற்கும் அவர், பல்வேறு தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.
தமிழ்நாட்டில் புதிய தொழில்களை தொடங்கவும், முதலீடுகளை அதிகரிக்கவும் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
1.5 டிரில்லியன் டாலர் இலக்கு
தமிழகத்தை 2036-ஆம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக உயர்த்துவது அரசின் முக்கிய இலக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற முதல் 100 நாட்களில் நடைபெற்ற முதலீட்டு மாநாட்டில் 104 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, ரூ.1,02,514 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாகவும், 1,21,788 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் எனவும் அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
லண்டன் பயணத்தை முடித்துக் கொண்டு செப்டம்பர் 16-ம் தேதி புறப்படும் முதல்வர், துபாய் வழியாக செப்டம்பர் 17-ம் தேதி சென்னை திரும்ப உள்ளார்.
