சென்னை: தமிழக சட்டசபையில் காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்திற்கு முதல்-அமைச்சர் விஜய் இன்று பதிலுரை அளித்து பேசினார். மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் அமைதிக்கு காவல்துறையே அடித்தளம் என்று அவர் தெரிவித்தார்.
கடந்த 18 நாட்களாக சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், கடந்த 3-ந்தேதி காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அ.தி.மு.க. சட்டமன்ற கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்று அரசின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “த.வெ.க. அரசு அமைந்த 116 நாட்களில் தமிழ்நாடு ரிவர்ஸ் கியரில் சென்று கொண்டிருக்கிறது. அரசின் அறிவிப்புகளைப் பார்க்கும்போது எல்லா திட்டங்களுக்கும் சேர்த்து ‘தாய்மாமன் காதுகுத்து திட்டம்’ என்று பெயர் வைத்திருக்கலாம்.
கடந்த 116 நாட்களில் சுமார் 550 குற்றச் சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் 200 கொலைகள், 300-க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமைகள், 8 காவல் மரணங்கள், 10 ஆணவக் கொலைகள் அடங்கும். எங்களுடைய கேள்விகளுக்கு முதல்-அமைச்சர் நேரடியாக பதில் சொல்ல வேண்டும்” என்று குற்றம்சாட்டினார்.
எடப்பாடி பழனிசாமியும் குற்றச்சாட்டு
அ.தி.மு.க. சட்டமன்ற கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, த.வெ.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பல்வேறு கொலை, கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.
உதயநிதி ஸ்டாலின் பேசிக் கொண்டிருந்தபோது இடையே எழுந்து பேசிய முதல்-அமைச்சர் விஜய், உறுப்பினர்கள் எழுப்பும் அனைத்து கேள்விகளுக்கும் திங்கட்கிழமை தெளிவான விளக்கம் அளிப்பதாக தெரிவித்தார்.
மேலும், “நான் இங்கே இல்லை என்றாலும் யார்-யார் என்ன கேள்விகள் கேட்கிறார்கள் என்ற தகவல் எனக்கு வந்து விடும். எல்லாவற்றிற்கும் தெளிவான பதிலை சொல்வேன். அப்போது அவர்கள் (தி.மு.க.) யாரும் எழுந்து ஓடிவிடக்கூடாது” என்று கூறிவிட்டு சட்டசபையில் இருந்து வெளியேறினார்.
முதல்-அமைச்சர் பதிலுரை
இதையடுத்து 3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடியது. காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கை விவாதத்திற்கு பதிலளித்து முதல்-அமைச்சர் விஜய் உரையாற்றினார். அவருக்கு த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் கரவொலி எழுப்பி வரவேற்பு தெரிவித்தனர்.
அப்போது முதல்-அமைச்சர் விஜய், “மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் அமைதிக்கு அடித்தளம் காவல்துறை. ஒரு மாநிலத்தின் அமைதியில்தான் முன்னேற்றம் உள்ளது. சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருந்தால்தான் தொழில் முதலீடுகள் வரும். சட்டத்தை மதிக்காதவர்களுக்கு காவல்துறை எதிரியாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
