சென்னை: நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கியுள்ள ‘சீன்’ திரைப்படம் திரையரங்குகளில் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது. படத்தில் சூர்யாவுடன் நஸ்ரியா நசீம், நஸ்லென் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படம் வெளியான முதல் நாளிலேயே உலகளவில் ரூ.34.25 கோடி வசூல் செய்ததாகத் தகவல்கள் வெளியாகின.
இரண்டாவது நாளிலும் படத்தின் வசூல் தொடர்ந்து அதிகரித்துள்ளது. இரண்டு நாட்களில் உலகளவில் ரூ.37 கோடியைத் தாண்டியுள்ளதாக இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த வசூல் நிலவரம் சூர்யா ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மலையாளத்தில் ‘ஆவேஷம்’ உள்ளிட்ட படங்கள் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ஜித்து மாதவன், இந்தப் படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருப்பதும், மாறுபட்ட கதைக்களமும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.
நஸ்ரியா 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழில் நடித்திருப்பதும், மலையாள நடிகர் நஸ்லென் தமிழில் அறிமுகமாகியிருப்பதும் படத்தின் கூடுதல் சிறப்புகளாக அமைந்துள்ளன. அடுத்தடுத்த நாட்களில் வசூல் எவ்வாறு இருக்கும் என்பதைத் திரையுலகினர் கவனித்து வருகின்றனர்.
