பாகிஸ்தான் கடந்த சில நாட்களாக இந்தியாவுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில், போரில் வெற்றி பெற்றதாக தம்பட்டம் அடித்து கொண்டாடியது. ‘ராணுவத்துக்கு நன்றி தினம்’ என்ற பெயரில், மே 11ஆம் தேதி அந்த நாடு முழுவதும் விழாவாக கொண்டாடப்பட்டது.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் 26 இந்தியர்கள் பாக்., பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு பதிலடியாக, இந்தியா ‘ஆப்பரேஷன் சிந்துார்’ என்ற ராணுவ நடவடிக்கையை நடத்தியது.இந்த நடவடிக்கையில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் தகர்க்கப்பட்டு, 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதன் பின்னர் இரு நாடுகளும் ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்களில் ஈடுபட்டன.
பாக்., இதை ‘இரும்புச்சுவர்’ என பெயரிட்டு விளம்பரப்படுத்தியது. இந்திய ராணுவம், பாக்., விமானப்படை தளங்கள் மற்றும் ரேடார் மையங்களை அழித்தது. பின்னர், பாக்., போர் நிறுத்தம் கோரியதைத் தொடர்ந்து, இந்தியா அதனை ஏற்றுக்கொண்டது.இந்நிலையில், பாக்., தனது ராணுவ வெற்றியாக இந்த போரை விளங்கிக் கொண்டு, அதற்காக நன்றி தெரிவிக்கும் நிகழ்வுகளை நடத்தி வருகிறது.
‘ரேடியோ பாகிஸ்தான்’ வானொலியில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் உரை வாசிக்கப்பட்டது. அதில் ராணுவ வீரர்களுக்காக நன்றி தெரிவித்து, இறந்தவர்களுக்காக சிறப்பு பிரார்த்தனை செய்யும் பணிக்குத் தாங்கள் விருப்பம் தெரிவிப்பதாக அவர் கூறினார்.பஞ்சாப், சிந்து பகுதிகளில் மக்கள் வீதிகளில் பாக்., கொடிகளை ஏந்தி சென்றனர். ஹைதராபாத் பகுதியில் பட்டாசுகள் வெடித்தன.
போர் நிறுத்தத்தையே வெற்றி என கொண்டாடும் பாக்., செயல் சர்வதேசத்தில் கலவையான பார்வைகளை ஏற்படுத்தியுள்ளது.பிரதமர் ஷெரீப் உரையில், இந்தியாவுடன் நீண்டகால பிரச்னைகள் போக்க அமைதிப் பேச்சுகளை நடத்த விருப்பம் இருப்பதாக தெரிவித்தார். சீனாவுக்கான நன்றியும் அவரது உரையில் இடம்பெற்றது. பாக்., ராணுவ அமைச்சர் க்வாஜா ஆசிபும், காஷ்மீர், பயங்கரவாதம், நீர்வள ஒப்பந்தம் போன்ற விடயங்களில் எதிர்கால பேச்சுகள் தொடரும் என நம்பிக்கை தெரிவித்தார்.