நியூயார்க்: ஐநா பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்தாமல் வெறும் தற்காலிக உறுப்பினர்களை மட்டும் அதிகரிப்பது உண்மையான சீர்திருத்தமாக இருக்காது என இந்தியா வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் தற்போது அமெரிக்கா, ரஷியா, சீனா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய ஐந்து நாடுகள் மட்டுமே நிரந்தர உறுப்பினர்களாகவும் வீட்டோ அதிகாரம் பெற்ற நாடுகளாகவும் உள்ளன.
நீண்ட காலமாக இந்தியா நிரந்தர உறுப்பினர் பதவியை கோரி வருகிறது. பல்வேறு நாடுகளும் இந்தியாவின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இந்நிலையில் ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பி. ஹரிஷ், பாதுகாப்பு சபை சீர்திருத்தம் குறித்த கூட்டத்தில் பேசியபோது, “நிரந்தர உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்காமல் வெறும் தற்காலிக உறுப்பினர்களை மட்டும் சேர்ப்பது அதிகார அமைப்பில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது” என்று கூறினார்.
மேலும், “உலக நாடுகள் உண்மையான சீர்திருத்தத்தை எதிர்பார்க்கின்றன. தற்போதைய அமைப்பை பாதுகாக்கும் நோக்கில் சில நாடுகள் தடைகளை ஏற்படுத்துகின்றன” என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
இத்தாலி தலைமையிலான ‘யுனைட்டிங் பார் கான்சென்சஸ்’ குழுவும், அதில் உறுப்பினராக உள்ள பாகிஸ்தானும் புதிய நிரந்தர உறுப்பினர்களை சேர்க்கும் முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாக இந்தியா மறைமுகமாக விமர்சித்துள்ளது.