இஸ்லாமாபாத்: கடன் சுமையால் திணறும் பாகிஸ்தான், தற்போது 4.9 பில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ.41,170 கோடி கடன் வாங்கும் முடிவை எடுத்துள்ளது. பயங்கரவாத அமைப்புகளை தொடர்ந்து ஆதரித்துவரும் நிலை காரணமாக பாகிஸ்தானில் தொழில் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு மிக மோசமான நிலையில் உள்ளது.

அத்தியாவசிய தேவையான கச்சா எண்ணெய் போன்ற பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத அளவிற்கு நிதி நெருக்கடி நிலவுகிறது. இந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக பாகிஸ்தான், சர்வதேச நாணய நிதியம் (IMF) மூலம் கடன் பெற்றுள்ளது. இதற்குப் பிறகும் நிதி நிலைமையை சீர்செய்ய முடியாமல் தவிக்கிறது.
IMF ஏற்கனவே இரண்டு தவணைகளாக உதவி வழங்கியுள்ளது. ஆனால் அடுத்த கட்ட கடனுக்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக மின்சாரம், சமையல் எரிவாயு விலை உயரும் அபாயம் உள்ளது. விவசாயத்திற்கும் கூடுதல் வரி விதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
2024-25 நிதியாண்டில் பாகிஸ்தான் அரசு நிர்ணயித்த 3.6% பொருளாதார வளர்ச்சி இலக்கை எட்ட முடியவில்லை. வெறும் 2.68% வளர்ச்சியையே பெற்றுள்ளது. இதனால் நிதி நெருக்கடி மேலும் தீவிரமடைந்துள்ளது. இந்த சூழலில், நீண்டகால கடனாக 4.9 பில்லியன் டாலர் பெறும் முயற்சியில் பாகிஸ்தான் இறங்கியுள்ளது.
இந்த முடிவு, பாகிஸ்தான் திட்டமிடல் செயலாளர் தலைமையில் நடந்த உயர்மட்டக் குழு சந்திப்பில் எடுக்கப்பட்டது. ஒருபுறம் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு அளிக்கும் இந்த நாடு, மறுபுறம் உலக நாடுகளிடம் பணம் கேட்டு கையேந்தும் நிலையில் உள்ளது.
இதனால் பாகிஸ்தான் அரசின் நம்பகத்தன்மை மேலும் கேள்விக்குறியாகியுள்ளது.