புதுடில்லி: வங்கதேசத்துடன் இணைந்துள்ள சர்வதேச எல்லை பகுதியில், சட்டவிரோத நுழைவுகளைத் தடுக்க மற்றும் கண்காணிப்பு நடவடிக்கையை சிறப்பாக்கும் வகையில், பி.எஸ்.எப். (எல்லை பாதுகாப்பு படை) வீரர்களுக்கு புதிய நவீன உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் உடலில் அணியக்கூடிய 5,000 கேமராக்கள் மற்றும் பயோமேட்ரிக் ஸ்கேனர்கள் அடங்கும்.
இந்த உபகரணங்கள், எல்லைச் சோதனை மற்றும் நள்ளிரவுக் கண்காணிப்பு பணிகளை எளிதாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, சட்டவிரோத நுழைவுகளை நேரில் பதிவுசெய்து, சாட்சியாக பயன்படுத்துவதற்கும் இந்த உபகரணங்கள் உதவுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மத்திய உள்துறை அமைச்சகம், பி.எஸ்.எப். வீரர்களின் கோரிக்கையை ஏற்று, பாதுகாப்பை வலுப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த உபகரணங்களை அனுமதித்துள்ளது. வங்கதேச எல்லையில் இந்த ஆண்டு ஜூலை 15ம் தேதி வரை, 1,372 பேர் சட்டவிரோதமாக நுழைய முயன்றதாகவும், அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இத்தகைய நடவடிக்கைகள், எல்லைப் பகுதிகளில் அதிகரித்து வரும் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் முக்கிய பங்காற்றும் என பாதுகாப்பு வட்டாரங்கள் கூறுகின்றன.