ஆந்திரா : மீண்டும் ஹைதராபாத்தில் நடைபெறும் படப்பிடிப்பில் துணை முதல்வர் பவன் கல்யாண் பங்கேற்று உள்ளதாக அவரது புதிய படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதல்வர் பவன் கல்யாண் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார்.
ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதல்வராக கடந்த 2024-ம் ஆண்டு பதவியேற்றுக்கொண்ட நடிகர் பவன் கல்யாண், தனது அரசு அலுவல்கள் காரணமாக படப்பிடிப்புகளுக்கு நீண்ட விடுமுறை அளித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது மீண்டும் ஹைதரபாத்தில் நடைபெறும் படப்பிடிப்பில் அவர் ஈடுபட்டுள்ளதாக அவரது புதிய படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
இயக்குநர் சுஜீத் இயக்கத்தில் தே கால் ஹிம் ஓஜி (எ) ஓஜி எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் புதிய திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஷ்மி வில்லனாக நடிக்கின்றார்.
நீண்ட இடைவெளிக்கு பின்னர் மும்பைக்குத் திரும்பும் தாதாவின் கதையை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதரபாத், தடேபள்ளி மற்றும் மும்பை நகரங்களில் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதில், பவன் கல்யாணின் காட்சிகள் அனைத்தும் வரும் ஜூன் இரண்டாம் வாரத்திற்குள் படம் பிடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தப் புதிய படத்தின் படப்பிடிப்பானது பவன் கல்யாணின் அரசியல் ஈடுபாட்டினால் தள்ளிப்போனது.
வரும் செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ள இந்தப் படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் துணை முதல்வர் பவன் கல்யாண் நடித்திருப்பது அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.