செயின்ட் லூசியா: வெஸ்ட் இண்டீஸ் ஆல்–ரவுண்டரும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் அதிரடி நட்சத்திரமுமான ரொமாரியோ ஷெப்பர்ட், கரீபியன் பிரீமியர் லீக் (CPL) தொடரில் கிரிக்கெட் உலகையே ஆச்சரியப்பட வைத்த சாதனையை படைத்துள்ளார். கயானா அமேசான் வாரியர்ஸ் அணிக்காக விளையாடிய அவர், ஒரே ஒரு சட்டப்பூர்வ பந்தில் 22 ரன்களை குவித்தார்.

செயின்ட் லூசியா கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்த அபூர்வ சம்பவம் நிகழ்ந்தது. வேகப்பந்து வீச்சாளர் ஒஷேன் தாமஸ் வீசிய 15-வது ஓவரில், மூன்று தொடர் நோ–பால்களும், மூன்று சிக்ஸர்களும் இணைந்து, ஒரே ஒரு சட்டப்பூர்வ பந்தில் 22 ரன்கள் சேர்க்கப்பட்டன. இது CPL வரலாற்றிலேயே புதிய சாதனையாகும்.
ஏற்கனவே IPL 2025 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக வெறும் 14 பந்துகளில் அரைசதம் அடித்து அனைவரையும் வியக்க வைத்திருந்த ஷெப்பர்ட், அதே அதிரடி ஃபார்மில் CPLயிலும் திகழ்ந்து வருகிறார்.
இந்தப் போட்டியில் 7-வது இடத்தில் களமிறங்கிய அவர், 34 பந்துகளில் 7 சிக்ஸர்களும், 5 பவுண்டரிகளும் அடித்து ஆட்டமிழக்காமல் 73 ரன்கள் குவித்தார். இருந்தாலும், அவரது அதிரடி இன்னிங்ஸ் வீணானது. 203 ரன்கள் இலக்கை துரத்திச் சென்ற செயின்ட் லூசியா கிங்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ரொமாரியோ ஷெப்பர்டின் இந்த சாதனை, T20 கிரிக்கெட்டில் இன்னும் எத்தனை வித்தியாசங்கள் நிகழலாம் என்பதை காட்டுகிறது. ரசிகர்கள் இவரை “மரண அடி நாயகன்” என்று புகழ்ந்து வருகிறார்கள்.