தஞ்சாவூர்: தஞ்சாவூர் மணிமண்டபம் அருகேயுள்ள தமிழரசி திருமண மண்டபத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்க (தமுஎகச) 16 ஆவது மாநில மாநாடு தொடக்க விழா நேற்று நடைபெற்றது.
பத்மஸ்ரீ, கலைமாமணி விருதாளர்கள் ஷேக் மெஹபூப் சுபானி, காலிஷா பீ மெஹபூப் நாகசுரக் கலை நிகழ்ச்சிகள், தமுஎகச கலைக்குழுக்கள் இசை நிகழ்ச்சியுடன் இவ்விழா தொடங்கியது. கலை நிகழ்ச்சிகளை பிரகதீஸ்வரன், கரிசல் கருணாநிதி, வசந்தி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற தொடக்க அமர்வில் தமுஎகச மாநிலத் தலைவர் மதுக்கூர் இராமலிங்கம் தலைமையில் கவிஞர் வெண்புறா அஞ்சலி உரையாற்றினார். பின்னர், தமுஎகச மதிப்புறு தலைவரும், மதுரை தொகுதி மக்களவை உறுப்பினருமான சு. வெங்கடேசன் சிறப்புரையாற்றினார்.
எழுத்தாளர் புதிய மாதவி, கேரள புரோகமன கலா சாகித்ய சங்க பொதுச் செயலர் கே.பி. மோகனன், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றப் பொதுச் செயலர் அறம் ஆகியோர் பேசினர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எழுத்தாளர் எஸ்.ஏ. பெருமாள், தஞ்சாவூர் மேயர் சண். ராமநாதன், தொழிலதிபர்கள் பி. சுப்பிரமணி சர்மா, சா. ஆசிப் அலி, கல்வியாளர் புனிதா கணேசன் உள்ளிட்டோருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
மாலையில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் பேராசிரியர் அருணன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க துணைத் தலைவர் உ. வாசுகி உள்ளிட்டோர் பேசினர். நிகழ்ச்சிகளை ம. மணிமாறன், ஆர். ஈஸ்வரன், க. மலர்விழி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.