புதுடில்லி: வேலை நிறுத்தம் தொடக்கம்… டில்லி அரசின் கூடுதல் வரி மற்றும் சி.என்.ஜி., எரிவாயு விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டில்லியில் போக்குவரத்து மற்றும் டாக்ஸி சங்கங்கள் சார்பில் அறிவிக்கப்பட்ட மூன்று நாள் வேலைநிறுத்தம் நேற்று துவங்கியது.
வர்த்தக வாகனங்கள் மீதான சுற்றுச்சூழல் இழப்பீட்டு வரியை டில்லி அரசு உயர்த்தியுள்ளது. தினசரி அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சி.என்.ஜி., எரிவாயு விலைகள் மாற்றப்பட்டு வருகின்றன.
தொடர்ந்து எரிபொருள் விலை உயர்ந்து வருவதாக எதிர்ப்பு எழுந்துள்ளது. இப்பிரச்னைகளை முன்வைத்து, லாரிகள், தனியார் பஸ்கள், டாக்ஸிகள் மற்றும் மேக்ஸி கேப் நடத்துநர்களின் மேல்மட்ட அமைப்பான, அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் சார்பில் இந்த மூன்று நாள் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
அதிகரித்து வரும் எரிபொருள் விலையை கருத்தில் கொண்டு, டாக்சி மற்றும் ஆட்டோ கட்டணங்களை உயர்த்த வலியுறுத்தி, டில்லியில் உள்ள வர்த்தக வாகன ஓட்டுநர்கள் சங்கங்களும் இந்த வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
இதன் படி, பிற அமைப்புகளுடன் இணைந்து, ‘சாலக் சக்தி யூனியன்’ மற்றும் ‘சக்கா ஜாம்’ அமைப்புகளின் சார்பில் நேற்று வேலை நிறுத்த போராட்டம் துவங்கியது.
போராட்டத்தின் ஒரு பகுதியாக, சஞ்சய் காந்தி போக்குவரத்து நகர் போன்ற தொழில்துறைப் பகுதிகளில் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டன.
டாக்ஸி மற்றும் தனியார் பஸ்களின் வேலை நிறுத்தத்தால், புது டில்லி ரயில் நிலையம், ஆனந்த் விஹார் மற்றும் மண்டி ஹவுஸ் உள்ளிட்ட தேசிய தலைநகரின் மிகவும் பரபரப்பான சில இடங்களில், பயணியர் சிரமங்களை எதிர்கொண்டனர்.
இருப்பினும், ஆறு ஆட்டோ ரிக் ஷா சங்கங்கள், இந்த வேலைநிறுத்தத்திலிருந்து விலகி இருப்பதாக அறிவித்து உள்ளன.