சென்னை: இண்டியா கூட்டணி தொடர்பாக திமுக எடுத்துள்ள நிலைப்பாட்டுக்கு மறைமுகமாக பதிலளித்துள்ள காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், காங்கிரஸ் இல்லாமல் இண்டியா கூட்டணி இல்லை என்றும், பாஜக – ஆர்எஸ்எஸ் கொள்கைகளுக்கு எதிராக ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற சக்திகளை ஒன்றிணைக்கும் முக்கிய இயக்க சக்தியாக காங்கிரஸ் தொடர்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
‘காங்கிரஸ் இல்லாமல் இண்டியா கூட்டணி இல்லை. பாஜக – ஆர்எஸ்எஸ் திட்டத்துக்கு எதிராக ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற கட்சிகளை ஒன்றிணைக்கும் முக்கிய சக்தியாக காங்கிரஸ் தொடர்கிறது’ என காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘சிபிஎம், ஆம் ஆத்மி கட்சி, திரிணமூல் காங்கிரஸ் மற்றும் பல்வேறு பிற கட்சிகள் மாநில அளவில் காங்கிரஸுடன் அரசியல் கருத்து வேறுபாடுகளை கொண்டிருந்துள்ளன. இருப்பினும், ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவுக்கு எதிரான பெரிய போராட்டத்தில் அவர்களின் பங்கை நாம் மதிக்கிறோம்.
பொதுவான ஜனநாயக மற்றும் அரசியலமைப்பு சார்ந்த பிரச்சினைகளில் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. காங்கிரஸை கேள்வி கேட்பதற்குப் பதிலாக, பாஜகவுக்கு எதிராக இருப்பதாகக் கூறுபவர்கள் ஏன் எதிர்க்கட்சிகளுடன் உறுதியாக நிற்கத் தயங்குகிறார்கள் என்று கேட்க வேண்டும்.
காங்கிரஸ் கட்சி ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவுக்கு எதிராக பாராளுமன்றத்திலும், தெருக்களிலும், ஜனநாயக நிறுவனங்களிலும் தொடர்ந்து போராடி வருகிறது. அரசியலமைப்பு, மதச்சார்பின்மை, சமூக நீதி மற்றும் கூட்டாட்சியை பாதுகாக்க அரசியல் விலையையும் செலுத்தியுள்ளோம்.
ஒரு விஷயம் தெளிவாக இருக்கட்டும். காங்கிரஸ் இல்லாமல் இண்டியா கூட்டணி இல்லை. பாஜக – ஆர்எஸ்எஸ் திட்டத்திற்கு எதிராக ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற கட்சிகளை ஒன்றிணைக்கும் முக்கிய சக்தியாக காங்கிரஸ் தொடர்கிறது’ எனத் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ஜூன் 8-ம் தேதி நடைபெற உள்ள இண்டியா கூட்டணிக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என திமுக அறிவித்துள்ள நிலையில், மாணிக்கம் தாகூரின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.