சென்னை: மண்ணையும் மரங்களையும் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்படும் இயற்கை நேசிப்பவர்தான் முதல்வர் விஜய் என ஷோபா சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, சட்டமன்ற உறுப்பினர் எம்.அருள்பிரகாசம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர், “எனக்கு மேடையில் பேசிப் பழக்கம் இல்லை. கடந்த 25 ஆண்டுகளாக ஈஷா மூலம் யோகா பயின்று வருகிறேன்.
மரம் என்பது வானத்தை நோக்கி நிற்கும் ஒரு கவிதை போன்றது. அதை அழிக்கும் உரிமை யாருக்கும் கிடையாது. மனம் வருந்தும் நேரங்களில் மரத்தை கட்டிப்பிடித்தால் கூட புத்துணர்ச்சி கிடைக்கும் என்பதை நான் அனுபவித்திருக்கிறேன்.
இந்த நேரத்தில் நடிகர் விவேக்கை நினைவுகூர விரும்புகிறேன். அவர் இருந்திருந்தால் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக இன்னும் பல செய்திருப்பார். மண்ணையும் மரங்களையும் பாதுகாக்க வேண்டியது நம் கடமை. மக்களை காப்பாற்ற வந்துள்ள புதிய அரசு இயற்கையையும் பாதுகாக்கும். இயற்கையை நேசிக்கும் நண்பர்தான் இன்று நமக்கு முதலமைச்சராக உள்ளார்” என்று பேசினார்.