வாரணாசி: பாலியல் வன்கொடுமைக்கு ஆளான தகவலை திருமணத்திற்குப் பிறகு கணவரிடம் பகிர்ந்த இளம்பெண்ணின் புகாரின் பேரில், 6 ஆண்டுகள் பழைய வழக்கில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர், தனது பள்ளி பருவத்தில் சந்தித்த பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து திருமணத்திற்குப் பிறகு கணவரிடம் தெரிவித்துள்ளார்.
கடந்த 2019-ம் ஆண்டு 10-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, பக்கத்து வீட்டில் வசித்த தர்ஷத் பட்டேல் (60) என்பவர் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த பெண் கூறியுள்ளார்.
மேலும், தொடர்ந்து பலமுறை அச்சுறுத்தி தொந்தரவு செய்ததாகவும் தெரிவித்துள்ளார். பயம் காரணமாக பல ஆண்டுகளாக இந்த விஷயத்தை வெளியில் கூறாமல் இருந்த அவர், சமீபத்தில் தனது கணவரிடம் நடந்த சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.
இதையடுத்து கணவர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். சம்பவம் நடந்தபோது பாதிக்கப்பட்டவர் சிறுமியாக இருந்ததால், போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.