சென்னை: ஆவணப்பதிவு நடைமுறைகளை எளிமைப்படுத்தும் வகையில், இணையவழி வருகை இல்லா ஆவணப்பதிவு முறையை பதிவுத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
பத்திரப் பதிவுத்துறை தலைவர் அருண்சுந்தர் தயாளன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் 24 மணி நேரமும் இணையவழி ஆவணங்களை பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முறையின் மூலம் முதல் விற்பனை மனை, முதல் விற்பனை அடுக்குமாடி குடியிருப்பு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய விற்பனை ஆவணங்கள் மற்றும் வங்கி அடமான ஆவணங்கள் உள்ளிட்டவற்றை இணையவழியில் பதிவு செய்ய முடியும்.
ஆவணம் பதிவு செய்யப்பட்ட பின்னர், சார்பதிவாளரின் மின்னணு கையொப்பத்துடன் சம்பந்தப்பட்ட நபரின் உள்நுழைவு கணக்கு மற்றும் செல்பேசிக்கு அனுப்பப்படும்.
ஆவணத்தை பதிவு செய்யும் நபர்கள், பெறுபவர்கள் மற்றும் சாட்சிகள் அனைவரும் ஆதார் அட்டையை பதிவேற்றம் செய்ய வேண்டும். கைரேகை அல்லது கருவிழி அடையாள சரிபார்ப்பும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
வருங்காலத்தில் இந்த ‘வருகை இல்லா ஆவணப்பதிவு’ நடைமுறை கட்டாயமாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.