சென்னை: சென்னை போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்ற அமல்ராஜ், காவல் நிலையங்களை சுத்தமாக பராமரிக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
சென்னை போலீஸ் கமிஷனராக புதிதாக பொறுப்பேற்றுள்ள அமல்ராஜ், சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதோடு காவல் நிலையங்களின் தூய்மைக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
பொறுப்பேற்ற பிறகு 19-க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் நேரடியாக ஆய்வு மேற்கொண்ட அவர், பல இடங்களில் போதிய தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்படாததை கண்டறிந்ததாக கூறப்படுகிறது. சென்னை மாநகரில் 105 சட்டம்-ஒழுங்கு காவல் நிலையங்கள், 105 குற்றப்பிரிவு காவல் நிலையங்கள் மற்றும் 39 மகளிர் காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தாலும், சில இடங்களில் வளாகங்கள் குப்பை மேடாக காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, “நான் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்வேன். காவல் நிலையங்கள் தூய்மையாக இல்லாவிட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என அமல்ராஜ் எச்சரித்துள்ளார்.