மதுரை: திருப்பரங்குன்றம் விவகாரத்தை திமுக சரியாக கையாளவில்லை என்றும், மின்கட்டமைப்பு தொடர்பாக விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்றும் அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
மதுரை மேலூரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நிர்மல்குமார், திருப்பரங்குன்றம் விவகாரம் மற்றும் மின்வெட்டு பிரச்சினைகள் குறித்து கருத்து தெரிவித்தார்.
அப்போது பேசிய அவர், திருப்பரங்குன்றம் விவகாரத்தை திமுக அரசு சரியான முறையில் கையாளவில்லை என்றும், பிரச்சினை நீண்ட காலமாக தொடர்வதற்கு திமுகவே காரணம் என்றும் குற்றம்சாட்டினார்.
இந்த பிரச்சினைக்கு சட்டப்பூர்வமான மற்றும் அமைதியான தீர்வை தவெக அரசு காணும் என்றும், மதத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியலை தமிழ்நாட்டு மக்கள் விரும்பமாட்டார்கள் என்றும் கூறினார். தவெக தலைவர் விஜய்யும் அதனை ஏற்கமாட்டார் என தெரிவித்தார்.
மின்வெட்டு தொடர்பாக பேசிய அவர், கடந்த 12 ஆண்டுகளாக தமிழகத்தின் நிலை மாற்றமின்றி இருப்பதாகவும், முந்தைய ஆட்சிகள் மின்கட்டமைப்பை வலுப்படுத்த என்ன நடவடிக்கை எடுத்தன என்பதை விளக்கவில்லை என்றும் கூறினார்.
மேலும், மின்துறையைப் பற்றி பேசுவதற்கு செந்தில் பாலாஜிக்கு தகுதி இல்லை என்றும், மின்கட்டமைப்பு தொடர்பாக விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.