சென்னை: 61 நாள் மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து காசிமேடு துறைமுகத்தில் மீனவர்கள் ஆழ்கடல் பயணத்திற்கான தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் மீன்கள் இனப்பெருக்கத்திற்காக கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் அமலில் இருந்த 61 நாள் மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்தது.
இதனால் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 1,200 விசைப்படகுகள் ஆழ்கடலுக்கு செல்ல தயாராக உள்ளன. படகுகளில் உணவுப் பொருட்கள், மீன்பிடி வலைகள், ஐஸ் கட்டிகள், டீசல் மற்றும் குடிநீர் உள்ளிட்ட பொருட்கள் ஏற்றப்பட்டு வருகின்றன.
மீனவர்கள் 7 முதல் 15 நாட்கள் வரை ஆழ்கடலில் தங்கி மீன்பிடித்து பின்னர் கரை திரும்புவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மீன் வரத்து குறைவாக இருப்பதால் வஞ்சிரம், சங்கரா, இறால் உள்ளிட்ட மீன்களின் விலை உயர்ந்துள்ளது. மீனவர்கள் கரை திரும்பிய பின்னர் மீன் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், தேர்தல் வாக்குறுதியின்படி டீசல் மானியத்தை 1,800 லிட்டரில் இருந்து 3,600 லிட்டராக உயர்த்த வேண்டும் என்றும், வங்கி கடன் மற்றும் டீசல் வரி சலுகை வழங்க வேண்டும் என்றும் மீனவர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.