சென்னை: தமிழகத்தில் கால்நடை மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ள நிலையில், விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூன் 23 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பல்வேறு கல்லூரிகளில் 2026-27 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம், உடுமலைப்பேட்டை மற்றும் தேனி உள்ளிட்ட ஏழு இடங்களில் செயல்பட்டு வரும் கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் பிவிஎஸ்சி மற்றும் ஏ.எச். படிப்புகளுக்காக மொத்தம் 660 இடங்கள் உள்ளன.
அதேபோல் உணவுத் தொழில்நுட்பம், பால் வளத் தொழில்நுட்பம் மற்றும் கோழியின தொழில்நுட்பம் உள்ளிட்ட பி.டெக் படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
மே 25-ம் தேதி தொடங்கிய ஆன்லைன் விண்ணப்பப் பதிவு மூலம் இதுவரை பிவிஎஸ்சி படிப்புக்கு 10,678 பேரும், பி.டெக் படிப்புகளுக்கு 5,356 பேரும் விண்ணப்பித்துள்ளனர். மொத்த விண்ணப்ப எண்ணிக்கை 16,034 ஆக உயர்ந்துள்ளது.
மாணவர்களின் கோரிக்கையை ஏற்று விண்ணப்பிக்கும் கடைசி தேதி ஜூன் 17-ல் இருந்து ஜூன் 23 மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வெளிநாட்டு இந்தியர்கள் மற்றும் அவர்களது வாரிசுகளுக்கு இந்த சலுகை பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது.