புதுடில்லி: மத்திய அமைச்சரவை மற்றும் பாஜக அமைப்பு மாற்றம் குறித்த யூகங்கள் அதிகரித்து வரும் நிலையில், ராஜ்நாத் சிங் இல்லத்தில் அமித் ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் ஆலோசனை நடத்தியது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அமைச்சரவை மாற்றம் தொடர்பாக அரசியல் வட்டாரங்களில் தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இல்லத்தில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய பொதுச்செயலாளர் நிதின் நபின் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சந்திப்பு குறித்து பாஜக தரப்பில் அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை. இருப்பினும், கட்சியின் மத்திய அமைப்பில் மாற்றம் மற்றும் புதிய பொறுப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட்டிருக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
மத்திய அமைச்சர்களில் சிலர் கட்சி பணிகளுக்காக மாற்றப்படலாம் என்றும், அனுபவமிக்க மற்றும் இளம் தலைவர்களை இணைத்து புதிய அமைப்பு உருவாக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.