சென்னை: மதுபானக் கடைகளில் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்படுவது தொடர்பான புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், காலி பாட்டில்களை திரும்பப் பெறும் தானியங்கி இயந்திரங்களை அமைக்க டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்படுவது தொடர்பாக நீண்டகாலமாக புகார்கள் எழுந்து வருகின்றன. இதற்கு தீர்வு காணவும், சில்லறை பண தட்டுப்பாட்டை குறைக்கவும் டாஸ்மாக் நிர்வாகம் புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
அதன்படி, காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் தானியங்கி இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இந்த திட்டம் முதற்கட்டமாக சென்னை எழும்பூரில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்கிய மதுபாட்டிலின் லேபிளை இயந்திரத்தில் ஸ்கேன் செய்த பிறகு, காலி பாட்டிலை அதற்கென உள்ள பகுதியில் செலுத்த வேண்டும். இதையடுத்து ரூ.10 ஊக்கத்தொகை உடனடியாக டிஜிட்டல் முறையில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும்.
இந்த திட்டம் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும், பாட்டில்களை மறுசுழற்சி செய்வதற்கும் உதவும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எழும்பூரில் திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் விரைவில் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.