கொல்கத்தா: 12-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கொல்கத்தாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க ரெட் ரோட்டில் நடைபெறும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று தலைமையேற்க உள்ளார்.
சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் ஆண்டுதோறும் ஜூன் 21-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான 12-வது யோகா தின கொண்டாட்டம் மேற்குவங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் நடைபெற உள்ளது.
மத்திய ஆயுஷ் அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் வெளியிட்டுள்ள தகவலின்படி, பிரதமர் நரேந்திர மோடி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று யோகா நிகழ்வுகளுக்கு தலைமை தாங்க உள்ளார்.
இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக “Yoga for Healthy Ageing” அறிவிக்கப்பட்டுள்ளது. முதியோர் ஆரோக்கியம், மனநலம் மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் யோகாவின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதே இதன் நோக்கமாகும்.
மேலும் உலகம் முழுவதும் உள்ள 210-க்கும் மேற்பட்ட இந்தியத் தூதரகங்கள் மற்றும் இந்தியப் பண்பாட்டுத் தொடர்பு மன்றம் இணைந்து சுமார் 2,500 இடங்களில் யோகா தின நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளன.