சென்னை: சென்னை மாநகரப் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் சென்னை ஒன் செயலி மூலம் முதல் பயண டிக்கெட்டை வெறும் ஒரு ரூபாய்க்கு பெறும் சலுகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை மாநகரில் பொதுப் போக்குவரத்தை எளிதாக்கும் நோக்கில் தமிழ்நாடு அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சென்னை ஒன் செயலி, பயணிகளிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த செயலியின் மூலம் மாநகரப் பேருந்துகள், மெட்ரோ ரெயில்கள், புறநகர் மின்சார ரெயில்கள் மற்றும் ஆட்டோக்களுக்கான டிக்கெட்டுகளை ஒரே இடத்தில் பெற முடிகிறது.
இந்நிலையில், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் (கும்டா), புதிய பயனர்களை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை ஒன் செயலியில் UPI முறையைப் பயன்படுத்தி டிக்கெட் பெறும் பயணிகளுக்கு முதல் பயண டிக்கெட் வெறும் ரூ.1-க்கு வழங்கப்படுகிறது. இந்த சலுகை பொதுப் போக்குவரத்தை அதிகமாக பயன்படுத்த மக்களை ஊக்குவிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.