புதுடெல்லி:பிரேசிலுக்கு எதிரான நட்பு கால்பந்து போட்டிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், ‘பிபா’ ஆசியன் கோப்பை தொடரில் இருந்து இந்தியா விலகியுள்ளது.
முதன்முறையாக நடைபெற உள்ள ‘பிபா’ ஆசியன் கோப்பை கால்பந்து தொடர் செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 4-ம் தேதி வரை இந்தோனேசியா மற்றும் ஹாங்காங்கில் நடைபெற உள்ளது. ரூ.9.5 கோடி பரிசுத் தொகை கொண்ட இந்தத் தொடரில் இந்திய அணி ‘ஏ’ பிரிவில் மலேசியா, இந்தோனேசியா, சிங்கப்பூர் அணிகளுடன் இடம்பெற்றிருந்தது.
இதனிடையே அக்டோபர் 3-ம் தேதி கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில் நடைபெற உள்ள நட்பு போட்டியில், ஐந்து முறை உலக சாம்பியனான பிரேசில் அணியை இந்தியா எதிர்கொள்கிறது.
இரு தொடர்களிலும் ஒரே நேரத்தில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டதால், ஆசியன் கோப்பையில் இருந்து இந்தியா விலக முடிவு செய்துள்ளது. முதலில் இரண்டாம் தர இந்திய அணியை அனுப்புவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், தற்போது பிரேசில் போட்டிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு துணைப் பொதுச்செயலாளர் சத்யநாராயணன், பிரேசில் போட்டி மற்றும் ஆசியன் கோப்பை ஆகிய இரண்டிலும் ஒரே நேரத்தில் விளையாட முடியாததால் ஆசியன் கோப்பையில் இருந்து விலகியதாக தெரிவித்துள்ளார்.
2027 ஏ.எப்.சி. ஆசியக் கோப்பைக்கு இந்தியா தகுதி பெறத் தவறியுள்ள நிலையில், உலகத் தரவரிசையில் முன்னணியில் உள்ள அணிகளுடன் தொடர்ந்து விளையாடுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
