சென்னை: இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 220 கோயில்களுக்கு பரம்பரை முறை சாரா அறங்காவலர்களை நியமிப்பதற்கான விண்ணப்ப கால அவகாசம் ஆகஸ்ட் 28-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 220 கோயில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு கடந்த ஜூன் 14-ம் தேதி வெளியிடப்பட்டது.
இதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முதலில் ஜூலை 22-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் கோயில்களின் நலனை கருத்தில் கொண்டு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் ஆகஸ்ட் 12-ம் தேதி மாலை 5.45 மணி வரை நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில், பக்தர்களின் கோரிக்கையை ஏற்று தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கூடுதலாக விண்ணப்பிக்க வசதியாக, தற்போது அவகாசம் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆகஸ்ட் 28-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் படிவத்தை இணையதளம் வாயிலாகவோ, சம்பந்தப்பட்ட கோயில் அமைந்துள்ள மண்டல இணை ஆணையர் அலுவலகத்திலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம் என அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.
