சென்னை: தமிழகம் முழுவதும் ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள் மற்றும் கிராமப்புற அரசுப் பள்ளிகளில் கழிப்பறை பராமரிப்பு, பள்ளி வளாக தூய்மை மற்றும் தேவையான தூய்மைப் பொருட்களை வாங்குவதற்காக ரூ.86.94 கோடிக்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
2026-27-ம் கல்வியாண்டில் கிராமப்புறங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள தேவையான நிதியை ஒதுக்க வேண்டும் என ஊரக வளர்ச்சி ஆணையர் அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு, மாநில நிதிக் குழு மானியத்தின் கீழ் ரூ.86.94 கோடி நிதியை ஒதுக்கி அரசாணை பிறப்பித்துள்ளது.
இந்த நிதியின் மூலம் ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள் மற்றும் கிராமப்புறங்களில் அமைந்துள்ள அரசுப் பள்ளிகளில் கழிப்பறை பராமரிப்பு, வகுப்பறை மற்றும் பள்ளி வளாக தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மேலும், பள்ளிகளுக்குத் தேவையான தூய்மைப் பணிப் பொருட்களையும் வாங்குவதற்கு இந்த நிதி பயன்படுத்தப்பட உள்ளது.
கிராமப்புற அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு சுகாதாரமான மற்றும் பாதுகாப்பான கல்விச் சூழலை உருவாக்குவதில் இந்த நிதி ஒதுக்கீடு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
