சென்னை: தமிழக அரசு துறைகளில் லட்சக்கணக்கான காலிப்பணியிடங்கள் இருப்பதாக கூறப்படும் நிலையில், குரூப்-2 தேர்வில் வெறும் 41 காலியிடங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டிருப்பது தேர்வர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒருங்கிணைந்த குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதில் குரூப்-2 பதவிகளுக்கு 41 காலியிடங்களும், குரூப்-2ஏ பதவிகளுக்கு 780 காலியிடங்களும் என மொத்தம் 821 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
குரூப்-2 பிரிவில் உதவி தொழிலாளர் ஆய்வாளர், சார்பதிவாளர், துணை வணிகவரி அலுவலர், தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர் உள்ளிட்ட 14 வகையான பதவிகள் இடம்பெற்றுள்ளன. ஆனால் பல பதவிகளில் காலியிடங்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்திலேயே இருப்பதாக தேர்வர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சுமார் 8 லட்சம் பேர் விண்ணப்பிக்கும் தேர்வில் வெறும் 41 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக தேர்வர்கள் தெரிவித்துள்ளனர். குறைந்தபட்சம் 2,000 காலியிடங்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்த்ததாகவும் அவர்கள் கூறினர்.
அரசுத் துறைகளில் ஊழியர் பற்றாக்குறையால் பல பணிகளை ஒரே ஊழியர் மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளதாகவும், இதனால் பணிச்சுமை அதிகரித்துள்ளதாகவும் தேர்வர்கள் தெரிவித்தனர்.
தமிழக அரசு பணியிடங்கள் அனைத்தும் விரைந்து நிரப்பப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை கருத்தில் கொண்டு, குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தேர்வுகளில் கூடுதல் பணியிடங்களை சேர்க்க வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு ஊழியர் அமைப்புகளும் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வலியுறுத்தியுள்ளன.
