பெங்களூரு: கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 3 தமிழர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.15 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சம்பவத்தில் தொடர்புடைய வனத்துறையினர் மீது கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஹனூர் அருகே காவிரி வனவிலங்கு சரணாலயத்துக்குட்பட்ட ஷாக்யா வனப்பகுதியில் மானை வேட்டையாடியதாக கூறி வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அந்தோணிசாமி, ஜான்ரோஸ் பீட்டர், லாசர் குமார் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். மகிமை தாஸ் என்பவர் காயமடைந்து மைசூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவத்தைக் கண்டித்து அப்பகுதி மக்கள் வனத்துறை அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சாலைகளிலும் மறியல் நடைபெற்றதால் பதற்றமான சூழல் நிலவியது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, குடும்பங்களுக்கு தலா ரூ.15 லட்சம் நிவாரணம் வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டது. குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும், குழந்தைகளின் கல்விச் செலவை அரசு ஏற்கவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் வனத்துறையைச் சேர்ந்த 7 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து போராட்டங்கள் வாபஸ் பெறப்பட்டு, உயிரிழந்தவர்களின் உடல்களை பெற்றுக்கொள்ள குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர்.
