சென்னை: நடிகர் விஷால், ‘மகுடம்’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இயக்குநராக வேண்டும் என்பது தனது 35 ஆண்டுகால கனவு எனத் தெரிவித்துள்ள அவர், நடிகராக 23 ஆண்டுகள் பயணித்தாலும், இப்படத்தில் தன்னை ஒரு புதிய இயக்குநராகவே கருதுவதாகக் கூறியுள்ளார்.
‘மகுடம்’ படத்தில் மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் பயணிக்கும் கதாபாத்திரங்களில் விஷால் நடித்துள்ளார். 1960-களின் கேங்ஸ்டர், 1990-களின் இளையராஜா ரசிகர் மற்றும் 2025-ம் ஆண்டின் மெடிக்கல் ரெப் என வித்தியாசமான தோற்றங்களில் அவர் நடித்துள்ளார்.
படத்தின் ஆரம்ப இயக்குநர் மாற்றப்பட்டதையடுத்து, கதை மற்றும் திரைக்கதையில் மாற்றங்களை செய்து படத்தை தானே இயக்க முடிவு செய்ததாக விஷால் தெரிவித்துள்ளார்.
அரசியல் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், உதயநிதி தனது கல்லூரி நண்பர் என்றும், விஜய் தனது கல்லூரி சீனியர் என்றும் குறிப்பிட்டார். நடிகர் சங்கக் கட்டடத்தின் கல்வெட்டில் விஜய்யின் பெயர் நீண்ட காலம் நிலைத்திருக்கும் என்றும் அவர் கூறினார்.
மேலும், நடிகர் சங்கக் கட்டடம் திறக்கப்பட்ட பிறகு சாய் தன்ஷிகாவுடனான திருமணம் குறித்து நல்ல செய்தி தெரிவிப்பேன் என்றும் விஷால் தெரிவித்துள்ளார்.
