சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளுக்கான இரண்டாம் சுற்று கலந்தாய்வு நிறைவடைந்த நிலையில், மொத்த இடங்களில் 55.27 சதவீதம் இன்னும் காலியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடப்பு கல்வியாண்டுக்கான பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த 13-ம் தேதி தொடங்கியது. சிறப்புப் பிரிவில் 950 பி.இ., பி.டெக். இடங்களும், முதல் சுற்றில் பொதுப்பிரிவு மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டின் கீழ் 28,029 இடங்களும் ஒதுக்கப்பட்டன.
இரண்டாம் சுற்று கலந்தாய்வில் பொதுப்பிரிவில் 49,984 பேருக்கும், 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் 9,967 பேருக்கும் என மொத்தம் 59,951 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 418 பொறியியல் கல்லூரிகளில் கலந்தாய்வுக்கு 1,98,825 பி.இ., பி.டெக். இடங்கள் இடம்பெற்றிருந்தன. சிறப்புப் பிரிவு மற்றும் முதல் இரண்டு சுற்றுகள் முடிவில் 88,930 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. இதனால் 1,09,895 இடங்கள் காலியாக உள்ளன.
குறிப்பாக, 23 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை. மேலும் 167 கல்லூரிகளில் 10 சதவீதத்துக்கும் குறைவான சேர்க்கையே நடைபெற்றுள்ளது. அதே நேரத்தில் 111 கல்லூரிகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமான இடங்கள் நிரம்பியுள்ளன. 7 கல்லூரிகளில் முழுமையாக சேர்க்கை முடிந்துள்ளது.
தகவல் அறிவியல், சுற்றுச்சூழல் பொறியியல், ஜெனரேட்டிவ் ஏஐ மற்றும் மெஷின் லேர்னிங் உள்ளிட்ட சில பாடப்பிரிவுகளில் ஒரு மாணவர்கூட சேரவில்லை.
அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளான கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா பொறியியல் கல்லூரி மற்றும் எம்.ஐ.டி. கல்லூரிகளுக்கு மாணவர்களிடம் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த வளாகக் கல்லூரிகளில் சுமார் 99 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
