கோவை: கோவை குனியமுத்தூர் பி.கே.புதூர் பகுதியில் ஏ.டி.எம். எந்திரங்களில் நிரப்புவதற்காக வழங்கப்பட்ட ரூ.10 லட்சத்தை மோசடி செய்த வழக்கில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி அம்பிகாபுரத்தைச் சேர்ந்த கதிர்வேல் பச்சைமுத்து, அவரது மனைவி ஐஸ்வர்யா ஆகியோர் ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் நிரப்பும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். இந்நிலையில், எந்திரங்களில் நிரப்ப வேண்டிய ரூ.10 லட்சத்தை இருவரும் தங்களது சொந்த தேவைக்காக எடுத்துக்கொண்டு மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
பணத்தை நிறுவனத்திடம் திருப்பி அளிக்காமல் இருவரும் தலைமறைவாகினர். இதுகுறித்து நிறுவன உரிமையாளர் ரவிகுமார் அளித்த புகாரின் பேரில் குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதையடுத்து ஐஸ்வர்யாவை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள கதிர்வேல் பச்சைமுத்துவை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
